search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மடிப்பாக்கம் பகுதியில் சதாசிவ நகர் வாசிகளை அலறவிட்டுள்ள மழைநீர்-கழிவுநீர்
    X

    மடிப்பாக்கம் பகுதியில் சதாசிவ நகர் வாசிகளை அலறவிட்டுள்ள மழைநீர்-கழிவுநீர்

    • 3-வது குறுக்குத்தெரு, 6-வது மெயின்ரோடு ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரால் கடந்த ஒரு வாரமாக தெருக்களில் மக்களால் நடமாட முடியவில்லை.
    • இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மழைநீர் மற்றும் கழிவுநீரில் மெதுவாக செல்கிறார்கள்.

    சென்னை:

    மழைக்காலங்களில் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் மிக மோசமாக ஒரு காலத்தில் பாதித்தது உண்டு. படகுகள் மூலம் மக்களை மீட்பது, தெர்மாகோலில் தற்காலிக படகுகளை செய்து அதில் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் பயணிப்பது போன்ற காட்சிகள்தான் இருந்தது. இப்போது அந்த நிலை ஓரளவு தடுக்கப்பட்டாலும் மழைக்காலம் வந்தால் இப்போது பல தெருக்களில் தண்ணீர் தேங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

    இந்த ஆண்டு பருவமழை இன்னும் தீவிரம் அடையவில்லை. அதற்குள் பல தெருக்கள் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு மழைநீரும், கழிவுநீரும் கலந்து தேங்கிநிற்கிறது.

    3-வது குறுக்குத்தெரு, 6-வது மெயின்ரோடு ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரால் கடந்த ஒரு வாரமாக தெருக்களில் மக்களால் நடமாட முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அந்த தண்ணீரில் மெதுவாக செல்கிறார்கள்.

    இந்த பகுதியில் கழிவுநீர் எப்படி வெளியே வருகிறது என்பது பற்றி அந்த பகுதி வாசியான ஹரீஸ் என்பவர் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இன்னும் பாதாள சாக்கடை வசதிகள் முழுமையாக இல்லை. தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியாக கழிவுநீர் டேங்குகள் அமைத்து லாரிகள் மூலம் அவ்வப்போது அகற்றி வருகிறார்கள். அதே நேரம் பல வீடுகளில் முறைகேடாக கழிவுநீர் குழாய்களை மழைநீர் கால்வாயுடன் இணைத்துள்ளார்கள். அதன் காரணமாக மழைக்காலங்களில் கழிவுநீரும் சேர்ந்து வெளியேறுகிறது.

    பல இடங்களில் வீடுகளில் செப்டிக் டேங்க் நிரம்பியும் கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலக்கிறது.

    ஏற்கனவே மாநகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே மழைநீர் கால்வாய் பணிகள் நடக்கிறது. அதைமுழுமையாக ஒருங்கிணைக்கவில்லை. ஒரே தெருவில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் வரை வேலை செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் இந்த பணிகள் அரைகுறையாகவே செய்யப்பட்டுள்ளன. இதனால்தான் மழைநீரும் வெளியேற முடியாமல் கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. இதை முறையாக சீரமைக்காவிட்டால் இந்த நிலைமை சீராவது கடினம் என்றார்.

    பெரியார் நகர் விரிவு 2 மற்றும் 3-வது தெருக்களிலும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

    பிரதான சாலையான மடிப்பாக்கம் சபரிசாலையில் ஏற்கனவே மெட்ரோ வாட்டர் பணிகள் செய்யப்பட்டு கல், மணல் போட்டு நிரப்பி இருந்தனர் ஒரு வருடத்துக்கும் மேலாக அப்படியே போடப்பட்டிருந்த அந்த இடத்தை மீண்டும் தோண்டி, புதிதாக மணல், ஜல்லி கொட்டி வேலை செய்கிறார்கள். தேவையில்லாத இந்த வேலையால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

    மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

    Next Story
    ×