என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
- மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 93.20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.
- காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் மழை நீர் நிரம்பி சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தும் வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கிருஷ்ணகிரியில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து நேரம் செல்ல செல்ல சுமார் 3 மணி நேரம் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதேபோன்று நேற்று மாலை முதல் இன்று காலை விடிய, விடிய கனமழை பெய்தது.
இந்த மழையால் சாலைகள் வெள்ளக்காடானது. குறிப்பாக 5 ரோடு ரவுண்டானா அருகில் முட்டு அளவுக்கு தண்ணீர் சென்றது. மேலும் சென்னை சாலையில் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் நகரில் பெரும்பாலான இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. தொடர்ந்து இரவும் கிருஷ்ணகிரி நகரில் மழை விடாமல் பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் அஞ்செட்டி, பாரூர், தேன்கனிக்கோட்டை, நெடுங்கல், பெனுகொண்டாபுரம், போச்சம்பள்ளி, சூளகிகரி, ஊததங்கரை, சின்னாறு டேம், கே.ஆர்.பி. அணை என பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட தேர்பேட்டை சாலை 2-வது குறுக்கு தெரு முதல் 5-வது தெரு வரை உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்தது. மேலும் விஷஜந்துகளும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதேபோன்று காவேரிபட்டணம் பகுதியிலும் கனமழை பெய்தது. இதில் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் மழை நீர் நிரம்பி சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. கிருஷ்ணகிரி, நெடுங்கல், கே.ஆர்.பி. அணை பகுதியில் கனமழை கொட்டியதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 93.20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அஞ்செட்டி-6.50, பாரூர்-14.60, தேன்கனிக்கோட்டை-2, ஓசூர்-3.10, , கிருஷ்ணகிரி-93.20, நெடுங்கல்-25, பெனுகொண்டாபுரம்-14.30, போச்சம்பள்ளி-16, ராயக்கோட்டை-5, சூளகிரி-21, ஊத்தங்கரை-22.20, சின்னாறு அணை-19, கெலவர ப்பள்ளி அணை-6, கே.ஆர்.பி. அணை-57, பாம்பாறு அணை-39 என மாவட்டம் மொத்தம் முழுவதும் 343.90 மி.மீ பதிவாகி உள்ளது.






