search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்கப்படும்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
    X

    எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்கப்படும்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

    • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாளை பள்ளியை திறக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். குடிநீர், கழிவறை, கொசுக்கள் பாதிப்பு இல்லாமல் இருக்க பொது சுகாதாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வெள்ளம் வடிந்த பகுதிகளில் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண், சுவாச பிரச்சனை போன்றவை ஏற்படும். எலி காய்ச்சல் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும்.

    இதுவரை 35 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அள்ளப்பட்டுள்ளது. களப் பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எண்ணூரில் எண்ணெய் பாதித்த வார்டு 1, 2 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சி.பி.சி.எல். நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினர். தனிக்குழு ஆய்வு மேற்கொள்கிறது. எண்ணெய் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்கப்படும்.

    நிவாரணப் பணிகள் முடிந்தாலும் மறுவாழ்வு பணி, மீட்பு பணி போன்றவை தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×