search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி

    • கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு குழந்தை இறந்த சம்பவத்தை அடுத்து செம்மண்காடு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • ஆஸ்பத்திரியில் பிரபாகரன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா, செம்மண்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 10).

    இந்த குழந்தை, ஆயில்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தது. வழக்கம்போல் இன்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு, செம்மண்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள நிழற் கூடத்தில் பஸ்சுக்காக காத்திருந்தான். மேலும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டி அங்கு நின்று கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக தனியார் கல்லூரி பஸ் ஒன்று அதிவேகமாக வந்தது. அதே நேரத்தில் எதிரே லாரி ஒன்றும் வேகமாக வந்தது. அப்போது திடீரென கல்லூரி பஸ்சும், லாரியும் செம்மண்காடு பஸ் நிறுத்தம் அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    மோதிய வேகத்தில் கல்லூரி பஸ் நிலைதடுமாறி பள்ளி மாணவர்கள் நின்று கொண்டிருந்த நிழற் கூடத்தில் மின்னல் வேகத்தில் புகுந்தது. அந்த பஸ் நிற்காமல் சென்று மாணவர்கள் மீது மோதியது. இதில் நிழற்கூடத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டி உட்கார்ந்திருந்த பிரபாகரன் மீது பஸ்சின் டயர் ஏறி இறங்கியது. இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான்.

    இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்களை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆயில்பட்டி போலீசார், அங்கு விரைந்து வந்து மாணவன் பிரபாகரன் உடலை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு குழந்தை இறந்த சம்பவத்தை அடுத்து செம்மண்காடு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் பிரபாகரன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×