search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உங்கள் பலத்தை பாருங்க அண்ணாமலை?- பொன்னையன்
    X

    உங்கள் பலத்தை பாருங்க அண்ணாமலை?- பொன்னையன்

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வும் சரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் சரி, சிறந்த முறையில் பணியாற்றினார்கள்.
    • அண்ணாமலை, பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் தான், அவர் ஒன்றும் அகில இந்திய தலைவர் கிடையாது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வும் சரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் சரி, சிறந்த முறையில் பணியாற்றினார்கள். தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பு எங்களுக்கு மனப்பூர்வமாக இருந்தது. இஸ்லாமிய வாக்குகள் பா.ஜ.க. உடனான கூட்டணி காரணமாக சற்று அதிகமாகவே குறைந்திருக்கலாம். ஓரளவுக்கு பெண்கள் வாக்குகள் எங்களுக்குக் கிடைத்தன. பா.ஜ.க.வின் கொள்கை வேறு, எங்களுடைய கொள்கை வேறு. அ.தி.மு.க. என்பது சாதி, மத பாகுபாடுகளைப் பார்க்காத இயக்கம். எடப்பாடி பழனிசாமி அந்த வழியிலேயே செயல்படுகிறார். இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த பிரிவினராக இருந்தாலும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு ஈடேற்றவேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நோக்கம்.

    ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை நாங்கள் கிஞ்சித்தும் ஏற்கவில்லை. பா.ஜ.க. வேறு. நாங்கள் வேறு என்பதை படிப்படியாக சிறுபான்மையினர் உணர்வார்கள். அதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அ.தி.மு.க. - பா.ஜ.க. நட்புறவு தொடர்கிறது. பிரதமர் மோடி நல்ல முறையில் நாட்டை ஆள்கிறார். பா.ஜ.க.வில் இருந்து நிர்வாகிகளை நாங்களாக எங்கள் கட்சிக்கு வரச் சொல்லவில்லை. இன்னொரு கட்சியில் இருக்கும் உட்கட்சி பிரச்சனைகளை தேடித்தேடி கண்டுபிடிப்பது எங்கள் வேலையும் அல்ல. அவர்கள் என்ன பேசினார்கள் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது.

    பிரதமர் மோடியின் திறமைமிக்க ஆட்சியை நாங்கள் எப்போதுமே பாராட்டுகிறோம். தமிழ்நாட்டு நலனுக்கு மாறாக பா.ஜ.க. செயல்பட்டால் அதனை எதிர்ப்போம். அண்ணாமலை, பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் தான், அவர் ஒன்றும் அகில இந்திய தலைவர் கிடையாது. அவர் அவரது கட்சியை இங்கு வளர்க்கும் நோக்கில் செயல்படுகிறார். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை கண்டுகொள்ளும் தேவை எங்களுக்கு இல்லை. எங்கள் கட்சியில் 95.5 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக இருக்கின்றனர். அண்ணாமலை, ஓ.பி.எஸ்.சுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று கூறியிருந்தால், அவர் சற்று ஆராய்ந்து பேச வேண்டும். பா.ஜ.க. இங்கு எத்தனை தொகுதிகள் வென்றது, எவ்வளவு சதவீதம் வாக்குகள் பெற்றது, தமிழ்நாட்டில் தங்கள் நிலை என்ன என்பது கட்டாயம் தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு தெரியும். எனவே, அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒரே நிலையில் இல்லை.

    Next Story
    ×