என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் காதல் விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை?- போலீசார் விசாரணை
- கடந்த 12-ந்தேதி பள்ளிக்கு சென்ற காயத்ரி அதன்பிறகு விடுதிக்கு செல்லவில்லை.
- பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயத்ரியை பல்வேறு இடங்களில் தேடினர்.
திருப்பூர்:
திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி சந்தியா தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் காயத்ரி (வயது 16). அவினாசியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அங்குள்ள ஆண்கள் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும், காயத்ரிக்கும் இடையே காதல் ஏற்படவே பெற்றோர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர்.
மேலும் காயத்ரியை அவரது பெற்றோர் அவினாசி பள்ளியில் இருந்து மாற்றி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைபள்ளியில் சேர்த்தனர். அங்கு விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
கடந்த 12-ந்தேதி பள்ளிக்கு சென்ற காயத்ரி அதன்பிறகு விடுதிக்கு செல்லவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயத்ரியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் காயத்ரி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றார்களா என்று விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் அம்மாபாளையம் எஸ்.ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள பாறைக்குழியில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் மாணவி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது காயத்ரி என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் பரமேஷ், பிரேம் மற்றும் மாணவி ஒருவர் ஆகியோருடன் காயத்ரி வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காயத்ரி பாறைக்குழிக்குள் குதித்து தற்கொலை செய்தாரா அல்லது காதல் விவகாரத்தில் மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காயத்ரியை கொலை செய்தனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






