search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வியாசர்பாடியில் ரூ.31 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது- 2 பேரிடம் போலீசார் விசாரணை
    X

    வியாசர்பாடியில் ரூ.31 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது- 2 பேரிடம் போலீசார் விசாரணை

    • சென்னை வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக 2 பேர் வந்தனர்.

    இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் இருவரும் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சீட்டுக்கு அடியில் பை ஒன்று இருந்தது. அதை எடுத்து பார்த்தனர். அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த பணம் எப்படி வந்தது என்பது பற்றி இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு இருவரும் சரியாக பதில் அளிக்க வில்லை.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பணத்தை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். கட்டு கட்டாக இருந்த பணத்தை போலீசார் எண்ணி பார்த்தனர்.

    அப்போது ரூ.31 லட்சம் பணம் பையில் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதற்கு கணக்கு கேட்டனர். ஆனால் போலீசில் சிக்கியவர்களால் அதற்கு கணக்கு கொடுக்க முடியவில்லை.

    இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரூ.31 லட்சம் பணத்தையும் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி பெயர் விவரங்களை கேட்டனர். அவர்கள் மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் ராயபுரம் பகுதியை சேர்ந்த மதிவேல் என்பது தெரியவந்தது.

    இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×