search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து கடன் பெற முயன்றவர் கைது
    X

    சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து கடன் பெற முயன்றவர் கைது

    • மற்ற ஊழியர்களை வைத்து வங்கியின் கதவை இழுத்து மூடினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேகரை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடை வீதியில் செயல்பட்டு வரும் சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு நகை கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று வங்கிக்கு வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (44) என்பவர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கி தங்க நகையை அடகு வைத்து நகை கடன் பெற வேண்டும் என வங்கி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

    அவர் வைத்திருந்த நகைகளை மதிப்பீட்டாளர் மூர்த்தியிடம் கொடுத்த போது வங்கி கணக்கு தொடங்குவதற்காக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படத்தை பார்த்த வங்கி ஊழியர் மூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    வங்கி ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த எச்சரிக்கை செய்தியில் கரூரில் உள்ள கூட்டுறவு வங்கி கிளையில் போலி நகையை அடகு வைத்து நகைக்கடன் பெற வந்த நபர் போலி நகையை கொடுத்தபோது வங்கி ஊழியர்கள் அந்த நபரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதாகவும், இந்த நபர் வேறு எங்கேயாவது வங்கி கிளைக்கு சென்று அடகு வைத்து கடன் பெற முயற்சி செய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பதிவிட்டதை கவனத்தில் வைத்திருந்த வங்கி ஊழியர்கள், வாட்ஸ்-அப் குழுவில் இருக்கும் புகைப்படமும் இந்த நபரும் ஒரே நபர் தான் என்பதை கண்டுபிடித்தனர்.

    உடனடியாக மற்ற ஊழியர்களை வைத்து வங்கியின் கதவை இழுத்து மூடினர். பின்னர் சேகரை தப்பி ஓடாதவாறு பிடித்துக்கொண்டனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேகரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 42 பவுன் எடையுள்ள போலி நகைகள், போலி ஆதார் கார்டு, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் பல்வேறு இடங்களில் இதேபோன்று கைவரிசை காட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×