என் மலர்
தமிழ்நாடு

பேரையூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: முதியவர் உள்பட 3 பேர் பலி
- 3 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெய்வநாயகபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தெய்வ நாயகபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் வேலை பார்க்கும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அதன்படி சேலத்தில் பணியாற்றும் தங்கம் (வயது56), சென்னையில் வசித்து வந்த மாயாண்டி(60) ஆகியோர் திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தனர்.இன்று மதியம் பூஜை பொருட்களை வாங்க தங்கம், மாயாண்டி பேரையூர் செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து அதே ஊரைச்சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்ணன்(30) என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தங்கம், மாயாண்டி பேரையூருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கண்ணன் ஓட்டினார். 3 பேரும் தெய்வநாயகபுரத்தில் இருந்து சிலைமலைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரியின் டயர் ஏறியது. இதில் கண்ணன், தங்கம், மாயாண்டி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிழாவுக்கு பூஜை பொருட்களை வாங்கச் சென்ற 3 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெய்வநாயகபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.