search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்டையார்பேட்டையில் எண்ணெய் கசிவு கலப்பால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் மக்கள்- தோல்நோய் பரவும் அபாயம்
    X

    தண்டையார்பேட்டையில் எண்ணெய் கசிவு கலப்பால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் மக்கள்- தோல்நோய் பரவும் அபாயம்

    • குடிநீரில் ஆயில் கலந்து வருவதால் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.
    • குடிதண்ணீரில் ஆயில் கலந்து வருகிறது.

    தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள கருணாநிதி நகர், பட்டேல் நகர், ராஜீவ் காந்தி நகர், வினோபா நகர், தமிழன் நகர், ராஜசேகர் நகர், நெடுஞ்செழியன் நகர் ஆகிய தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இங்கு சுத்திகரிக்கப்படும் ஆயில் பல்வேறு விதமாக தரம் பிரிக்கப்பட்டு லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் வெளிமாவட்டங்கள் மற்றும், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தொழிற்சாலையின் உள் பகுதி வரை அமைக்கப்பட்டு உள்ள தண்டவாளப்பகுதிக்கு ஆயிலை கொண்டு செல்லவும், சரக்கு ரெயிலில் வரும் ஆயிலை இறக்கவும் வசதியாக மேல்பகுதியில் குழாய்கள் உள்ளன.

    இந்தநிலையில் சரக்கு ரெயில், லாரிகளில் ஆயில்களை ஏற்றி, இறக்கும் போது அதிக அளவில் எண்ணெய் வீணாக தரையில் கொட்டி வருகிறது. மேலும் ஆயிலை தரம்பிரிக்கும் போதும் ஆயில் பெருமளவு வீணாவதால் அது தரையில் சிதறி பூமிக்கு அடியில் செல்கிறது.

    இந்த எண்ணெய் கசிவுகள் பூமிக்கு அடியில் பரவி உடைப்பு ஏற்பட்ட குடிநீர் பைப்புகளுக்குள் கலந்து விடுவதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வரும் குடிதண்ணீரில் ஆயில் கலந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வருகின்றன. மேலும் தொட்டியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரும் அதிக அளவு ஆயில் படர்ந்து மேல்பகுதியில் மிதக்கின்றன. மழை காலங்களில் ஆயில் கலப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த தண்ணீரை குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்த ஆயில் கலந்த தண்ணீரை குடிப்பதாலும், குளிப்பதாலும் தோல் நோய்கள், அலர்ஜி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கு பலர் ஆளாகி வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இந்த பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து ஆயில் கலந்த தண்ணீரே வருகிறது. இதுபற்றி பொதுமக்கள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் தீர்வு கிடைக்கவில்லை.

    மெட்ரோ வாட்டர் பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்த பழைய குடிநீர் குழாய்கள் முழுவதும் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது. ஆனாலும் குடிதண்ணீரில் ஆயில் கலந்து வருகிறது. இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து கருணாநிதி நகர், பட்டேல் நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் மெட்ரோ வாட்டர் தண்ணீர் தினமும் வினியோகிக்கப்படுகிறது. குடிநீரில் ஆயில் கலப்பு தொடர்பாக தண்டையார்பேட்டை மண்டல மெட்ரோ வாட்டர் மற்றும் மாநகராட்சி சார்பில் ஆயில் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்ட மெட்ரோ வாட்டர் பைப்புகளில் ஏதேனும் ஓட்டை அல்லது கசிவு உள்ளதா? என்பதை கண்டுபிடிப்பதற்காக மெட்ரோ வாட்டர் துறையினர் ரூ.5 கோடி மதிப்புள்ள ஈ.வி.எம்.கேஸ் என்னும் நவீன கருவியை பயன்படுத்த உள்ளனர். இதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்ற பின்னரே செயல்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    குடிநீரில் ஆயில் கலந்து வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் பூபாலன் கூறியதாவது:-

    குடிநீரில் ஆயில் கலந்து வருவதால் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. ஆயில் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதால் அலர்ஜி, தோல் தொற்று நோய் அபாயத்தில் அனைவரும் உள்ளனர். இது பற்றி பலமுறை ஆயில் நிறுவனத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறார்கள். மேலும் ஆயில் நிறுவனத்தின் அருகில் உள்ள இடத்தை லாரிகளை நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. தண்ணீரில் ஆயில் கலந்து வருவதை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவிகா:-

    நான் கடந்த 20 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். ஆயில் கலந்த தண்ணீரை சமைப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மோசமான நிலையில் உள்ள இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தோல் நோய் உள்ளிட்ட நோய்தொற்று அச்சத்தில் அனைவரும் தவித்து வருகிறார்கள். என்னுடைய மகன் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளான். விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×