search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்- 3.32 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்
    X

    தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்- 3.32 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்

    • யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும்.

    சென்னை:

    நமது நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஓட்டு போடுவதற்கு வசதியாக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் 80 சதவீதத்துக்கு அதிகமான வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு இந்த பொருட்களை அனுப்பும் பணிகளும் இன்று முழு வீச்சில் நடைபெற்றன.

    இன்று மாலைக்குள் அனைத்து மையங்களுக்கும் மின்னணு எந்திரங்களை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்படுகிறது.

    தேர்தல் பணியில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டு போட வரும் வாக்காளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி 3 கட்டங்களாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் நாளை அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3726 மையங்களில் 708 மையங்கள் பதற்றமானவையாகும்.

    இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளை தலைமை செயலகத்தில் இருந்தபடியே அதிகாரிகள் கண்காணிக்க முடியும். அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


    தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார், 190 கம்பெனி துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர், காவலர்கள் என 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களில் யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலையில் இருந்தே வாக்குப்பதிவு மையங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே ஓட்டு போட்டுவிட வேண்டும் என்றே பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். இதனால் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் ஓட்டு போட வருகை தந்து விடுவார்கள்.

    இதுபோன்று முன் கூட்டியே வரும் வாக்காளர்களை வரிசையில் நிற்க வைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இதனை கண்காணித்து வாக்காளர்களை வரிசையாக அனுப்பி வைக்க உள்ளனர்.

    சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையம் வரை சென்று ஓட்டு போடுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் பல மையங்களில் ஏற்பாடுகள் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல மையங்களில் நுழைவுவாயல்களில் உள்ள படிகளே மாற்றுத்திறனாளிகளுக்கு தடைகளாக உள்ளன.

    சேத்துப்பட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாய்வு தளம் கைப்பிடிகள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. ஊன்றுகோலை பயன்படுத்தி வரும் வயதான முதியவர்கள் இந்த சாய்வு பாதையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படாமலேயே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற குறைகளை வாக்குப்பதிவு மையங்களில் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    நாளை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தேர்தல் நாளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 42 நாட்கள் பாதுகாக்கப்பட உள்ளன. இதன் பின்னர் ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    Next Story
    ×