என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது
- தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
- பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98.60 அடியை எட்டி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீவிரமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை கடந்த 3 நாட்களாக குறைந்து விட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் லேசான சாரல் பெய்கிறது. எனினும் இதுவரை பெய்த மழையால் பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை தொடங்கி உள்ளனர்.
அணை பகுதிகளை பொறுத்தவரை தொடர்மழை பெய்ததன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஆனால் தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98.60 அடியை எட்டி உள்ளது.
அந்த அணைக்கு வினாடிக்கு 998.73 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்றும் ஒருசில நாட்களில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 85 அடி வரை நீர் இருப்பு இருந்தாலே விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்துவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.






