search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்னி பஸ்களில் நெல்லை, தூத்துக்குடிக்கு ரூ.4 ஆயிரம் வரை வசூல்
    X

    ஆம்னி பஸ்களில் நெல்லை, தூத்துக்குடிக்கு ரூ.4 ஆயிரம் வரை வசூல்

    • பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
    • சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை நாளை மறுநாள் (24-ந்தேதி) முதல் விடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.

    கிறிஸ்தவ பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இன்றுடன் தேர்வு முடிகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்கள் நாளை வரை தேர்வு எழுதுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊர் செல்பவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கி உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வருவதால் பெரும்பாலானவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

    பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

    நாளை (23-ந்தேதி) பயணம் செய்ய ஆம்னி பஸ்களில் குறைந்த அளவில் இடங்கள் உள்ளன. ரெட் பஸ் இணையதளத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல்வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு வழக்கமாக குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. செமி சிலீப்பருக்கு ரூ.2,200 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.3000 முதல் ரூ.4,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி டிவி வசதி அதில் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில பஸ்களில் ரூ.3,500, ரூ.4000-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடிக்கு ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவிலுக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.3,600 வரையிலும், மதுரைக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரை வசூலிக்கிறார்கள்.

    ஒரு சில ஆம்னி பஸ்களில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது. ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.2,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,800, ரூ.2000 கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கிறார்கள். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

    தற்போது ரெயில்களில் இடம் நிரம்பிவிட்டதால் வேறு வழியில்லாமல் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்வார்கள் என்ற நோக்கத்தில் விமான கட்டணத்திற்கு இணையாக உயர்த்தி உள்ளனர்.

    சனிக்கிழமையிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகு தான் இயல்பான கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    Next Story
    ×