search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமணமான 3 மாதத்தில் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த புதுமாப்பிள்ளை பலி
    X

    கடலூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகையிட்ட காட்சி.

    திருமணமான 3 மாதத்தில் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த புதுமாப்பிள்ளை பலி

    • அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). அவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண நாளில் இருந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மேலும் உதயகுமார் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் உதயகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக சேர்க்கப்பட்டார். நேற்று (10 ந் தேதி) காலை உதயகுமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

    இன்று (11-ந் தேதி) அதிகாலை உதயகுமாருக்கு திடீரென்று உடல்நிலை மோசமாகி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல் சிவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கூறுகையில், தற்போது உதயகுமாருக்கு 27 வயது ஆகியுள்ளது. இரணைய ஆபரேஷன் செய்த உதயகுமார் ஹார்ட் அட்டாக்கால் இறந்ததாக கூறப்படுகிறது.

    இந்த வயதில் இது போன்ற நிகழ்வு ஏற்படுமா? ஆகையால் உதயகுமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவால் அவர் இறந்து உள்ளார். மேலும் இவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

    மேலும் இவரது பிரேத பரிசோதனை கடலூர் அரசு மருத்துவமனையில் பண்ணாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் அங்கு பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டால் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் இவர்களின் கோரிக்கையை ஏற்றதை தொடர்ந்து இறந்த உதயகுமார் மனைவி மனிஷா, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்ததன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×