search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா
    X

    நாமக்கல் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா

    • கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இக்கோவிலில் நாளை (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் கோவில் வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து இன்று காலையில் வருண தீர்த்தம், புனிதபடுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின பெருவேள்வி, மகாசாந்தி ஹோமம், அதிவாச ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், அருட்பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலையில் பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம், கங்கணம் கட்டுதல், சயனாதி வாசம், சகல தேவதைகளை வரவழைத்து விசேஷ பூஜை, பிரதான வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்து துறை, நகராட்சி, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் கும்பாபிஷேகத்துக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளனர்.

    விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோவில் அறங்காவல் குழுத் தலைவர் நல்லுசாமி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இன்று காலை முதலே கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஞ்சநேயர் பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    Next Story
    ×