search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிக்காக மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாய் பாலம் விரைவில் இடிக்கப்படுகிறது
    X

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிக்காக மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாய் பாலம் விரைவில் இடிக்கப்படுகிறது

    • சுரங்கப்பாதை தோண்டும் பணியும் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    • பறக்கும் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தையும் இணைக்க உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. மாதவரம் பால்பண்ணை- சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர், கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணிமனைவரை 26.1 கி.மீட்டர், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 44.6கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 76 உயர்நிலைப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள்,43 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சுரங்கப்பாதை தோண்டும் பணியும் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி பணிமனை மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மயிலாப்பூர் லஸ் சந்திப்பு அருகே இரட்டை சுரங்கப்பாதையில் மிகப்பெரிய அளவில் மெட்ரோ ரெயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக பறக்கும் ரெயில்நிலையம் எதிரே உள்ள பக்கிங்காம் கால்வாயில் உள்ள பாலம் இடித்து அகற்றப்பட உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க இருக்கிறது.

    மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் 4854.4 சதுர மீட்டர் பரப்பளவில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரிசிப்காட் மற்றும் கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணிமனை வழித்தடத்தை இணைக்கும் வகையில் அமைய இருக்கிறது. இதன் அருகே உள்ள பறக்கும் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தையும் இணைக்க உள்ளது. சிறப்பு பெற்ற கபாலீஸ்வரர் கோவிலையும் இணைப்பதால் இந்த மெட்ரோ ரெயில் நிலையம் பொதுமக்கள் அதிக அளவில்பயன்படுத்தும் இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுரங்கப்பாதை பணிக்காக பக்கிங்காம் கால்வாய் இடிக்கப்படும் போது தற்காலிக மாற்று ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே மந்தவெளி மற்றும் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து லஸ் சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படும். நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்கு வரத்தை திருப்பிவிடுவது தொடர்பாக போக்குவரத்து போலீசாருடன் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

    இது தொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் சுங்கப்பாதை பணிக்காக பங்கிங்காம் கால்வாயில் பறக்கும் ரெயில் நிலையம் எதிரே உள்ள பாலம் இடிக்கப்பட உள்ளது. சுரங்கப்பாதை ரெயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் பாலத்தின் தூண்கள் வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறையிடம் உரிய அனுமதி கேட்டு உள்ளோம். இந்த சுரங்கப்பாதை ரெயில் நிலையம் 35 அடி ஆழத்தில் இருக்கும். இப்பகுதியில் கடினமான பாறைகள் உள்ளதால் சுரங்கம் தோண்டும் பணி சவாலாக இருக்கும்.

    மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிக்காக தடுப்புகள் அமைப்பது இந்த மாத இறுதியில் தொடங்கும். முதல் கட்டமாக மின்சார கேபிள்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் போன்ற நிலத்தடியில் உள்ளவற்றை மாற்றுப்பாதையில் மாற்றுவது செப்டம்பர் மாதம் நடைபெறும். இதன்பின்னர் மெட்ரோ ரெயில் நிலையத்தின் வெளிப்புறச் சுவர்கள் கட்டும் பணி நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. சுரங்ப்பாதை தோண்டும்பணி அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.

    Next Story
    ×