search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையெழுத்திட்ட சத்துணவு ஊழியர்களால் பரபரப்பு
    X

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையெழுத்திட்ட சத்துணவு ஊழியர்களால் பரபரப்பு

    • சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர்.

    பொன்னேரி:

    பள்ளிகளில் காலை உணவு திட்டம் மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீஞ்சூர் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் வட்டார தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வளர்மதி, செயலாளர் லதா, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் குடும்ப பாதுகாப்பு ஓய்வு ஊதியம் ரூ.8,750 வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தினர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.

    இதற்காக நர்சு ஒருவர் வந்து இருந்தார். அவர் சத்துணவு ஊழியர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஊசியால் குத்தி ரத்தத்தை எடுத்தார். பின்னர் சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கூறும்போது, இந்த ரத்த கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க உள்ளோம். அவர் வாங்க மறுத்தால் முதலமைச்சருக்கு அனுப்பி வைப்போம் என்றனர்.

    Next Story
    ×