search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குறை சொல்லும் எடப்பாடி பழனிசாமி எங்காவது வந்து சுற்றிபார்த்தாரா?- அமைச்சர் சேகர்பாபு கேள்வி
    X

    குறை சொல்லும் எடப்பாடி பழனிசாமி எங்காவது வந்து சுற்றிபார்த்தாரா?- அமைச்சர் சேகர்பாபு கேள்வி

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் தேங்கிய மழைநீர் 95 சதவீதம் அளவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.
    • திரு.வி.க.நகர் மண்டலத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றி ‘பிளீச்சிங்’ பவுடர் தெளிக்கவும் உத்தரவிட்டு உள்ளோம்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது.

    சென்னையை பொறுத்தவரை கடந்த 31-ந்தேதி முதல் மழை பெய்து வந்தது. நேற்றிரவும் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன்காரணமாக, கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

    வட சென்னையில் திருவொற்றியூர், திரு.வி.க. நகர் மண்டலம் பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தேங்கிய மழைநீரும் இப்போது வடிந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல அளவிலான அதிகாரிகளுடன் மழை நீர் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் தேங்கிய மழைநீர் 95 சதவீதம் அளவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.

    திரு.வி.க.நகர் மண்டலத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றி 'பிளீச்சிங்' பவுடர் தெளிக்கவும் உத்தரவிட்டு உள்ளோம். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும்.

    கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய பகுதிகளில் அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார்.

    அவர் திட்டமிட்டு மேற்கொண்ட பணிகள் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்காமல் வடிந்துள்ளது.

    மேற்கு மாம்பலம், ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனி, ஜி.என்.செட்டி ரோடு, புரசைவாக்கம் டானா தெரு, 70 அடி ரோடு பகுதிகளில் கடந்த ஆண்டு மழையின் போது 10 நாட்களாக தண்ணீர் தேங்கியது.

    ஆனால் இப்போது இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. முழுவதும் வடிந்துவிட்டது. பெரியமேடு மசூதி பகுதி, பிரகாசம் சாலை பகுதிகளில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்கவில்லை. புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் தண்ணீர் தேங்காத அளவுக்கு நிரந்தர திட்டம் தீட்டி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை தான் இதற்கு காரணம்.

    தற்போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கூட அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காமல் இருக்க திட்டம் தீட்டி இந்த அரசு செயல்படுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக தண்ணீர் தேங்கி நின்ற இடங்களில் கூட இந்த ஆண்டு ஒருசொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை.

    ஆனால் மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல் அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த 4 நாட்களில் எங்காவது வந்து சுற்றிப் பார்த்தாரா? நிவாரண பணிகளில் ஈடுபட்டாரா? எதுவும் கிடையாது.

    மத்திய அரசுக்கு பயந்து பயந்துதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினாரே தவிர மக்களை பற்றி அவர் கவலைப்படவில்லை.

    எனவே அவர் குறை கூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள பணிகள் காரணமாக சென்னையில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழை தண்ணீர் 95 சதவீதம் வடிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×