search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் ஒரே நேரத்தில் 200 மழைக்கால மருத்துவ முகாம்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    சென்னையில் ஒரே நேரத்தில் 200 மழைக்கால மருத்துவ முகாம்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் பெய்து வரும் கனமழையையொட்டி அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் பகுதியில் இன்று காலை மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 220 கி.மீ. தூர அளவுக்கு ரூ.710 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. 157 கி.மீ. தூர அளவுக்கு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.

    இதுபோன்று பணிகள் முடிவடைந்த பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதற்கு முன்னர் 700 இடங்கள் வரையில் தண்ணீர் தேங்கி காணப்படும். தற்போது 40 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் 9 இடத்தில் மட்டுமே மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.

    குறிப்பாக செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் செம்மஞ்சேரி பகுதிகளும் பாதிப்பை சந்தித்து வந்தது. இந்த பாதிப்புகளை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக செம்மஞ்சேரி பகுதியில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. கல்லுக்குட்டை, புழுதிவாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.

    ஓரிரு இடங்களில் தேங்கும் மழைநீரும் ½ மணி நேரத்தில் வடிந்து விடுகிறது. கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பணிகள் நடைபெற்றதால் அங்கு இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இங்கு தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஆனால் தற்போது 2 இஞ்ச் அளவுக்கு அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

    விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலை மற்றும் பி.டி.ராஜன் சாலை பகுதியில் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டார். இதனால் கால்வாய் ஆக்கிரமிப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.

    சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 155 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களின் போது மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    கடந்த முறை மழை பெய்ய தொடங்கிய உடனேயே சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கி இருந்ததை காண முடிந்தது. இதனால் பல சுரங்க பாதைகள் மூடியே கிடந்தன. ஆனால் தற்போது கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டுமே வாகன போக்கு வரத்து தடைபட்டுள்ளது. மற்ற 15 சுரங்க பாதைகளும் எப்போதும் போல செயல்படுகின்றன. மழை பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×