search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது- துரைமுருகன் தாக்கு
    X

    காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது- துரைமுருகன் தாக்கு

    • குறுவை சாகுபடி ரொம்ப மோசமான நிலையில் உள்ளது.
    • நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டால் போதும்.

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடும் நிலையில் சென்னையில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நேற்று காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்து விடும்படி அந்த கமிட்டி சிபாரிசு செய்திருக்கிறது. ஆனால் அது போதாது என்று நாம் சொல்லி உள்ளோம். எனவே இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கிறது.

    அதில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் கலந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நம்முடைய கோரிக்கையை வற்புறுத்தி கேட்கும்படி கூறி இருக்கிறேன்.

    24000 கன அடி தண்ணீர் இருந்தால்தான் பயிர்கள் காயாமல் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லுமாறு கேட்டி ருக்கிறேன். ஆகவே இந்த கோரிக்கையை தமிழக அரசின் சார்பாக வைப்பார்கள்.

    கேள்வி:- கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறாரே? ஆணையம் சொல்லியும் கேட்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

    பதில்:- அதனால்தான் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறோம். வெள்ளிக்கிழமை வழக்கு வருகிறது. குறுவை சாகுபடி ரொம்ப மோசமான நிலையில் உள்ளது.

    கேள்வி:- மேட்டூர் அணையில் தண்ணீரும் குறைந்து கொண்டே வருகிறது. மாற்று ஏற்பாடு என்ன செய்யப் போகிறீர்கள்?

    பதில்:- மாற்று ஏற்பாடு என்ன பண்ண முடியும்?

    கேள்வி:- போதிய தண்ணீர் கிடைக்காததால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படுமா?

    பதில்:- வழக்கமாக இன்சூரன்ஸ் இருக்கிறது. அதை கொடுப்பார்கள்.

    கேள்வி:- கர்நாடகா 45 டி.எம்.சி. தண்ணீர் தராமல் நிலுவையில் வைத்துள்ளனர். அதை கேட்டு வலியுறுத்துவீர்களா?

    பதில்:- நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டால் போதும். தண்ணீர் வரத்து அதிகமான பிறகு அதை கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

    கேள்வி:- செப்டம்பர் 17-ந்தேதி ஒழுங்காற்று குழு காரைக்காலில் ஆய்வு நடத்த உள்ளதாக கூறி உள்ளனர். அதில் தமிழக அதிகாரிகள் கலந்து கொள்வார்களா?

    பதில்:- ஆமாம். நாம் இல்லாமல் எப்படி ஆய்வு நடக்கும். கமிட்டியில்தான் நாம் இருக்கிறோமே?

    கேள்வி:- ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பெறுவதில் பெரிய பிரச்சினையாக இருக்கிறதே?

    பதில்:- நான் சொல்வது என்னவென்றால் தண்ணீர் சில நேரங்களில் குறைந்து போவது உண்டு. பருவ மழை பொய்த்து போனால் எல்லா இடங்களிலும் தண்ணீர் குறைந்து விடும்.

    தண்ணீர் நிறைய இருக்கிற போது நமக்கு மாதாந்திரம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று ஒரு கணக்கு உள்ளது. தண்ணீர் குறைந்து விட்டால், இருக்கிற தண்ணீரை எப்படி பங்கிடுவது என்பதை கணக்கிட்டு வழங்க வேண்டும். அதை காவிரி மேலாண்மை ஆணையம்தான் செய்ய வேண்டும். அதில் அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் மறு படியும் கோர்ட்டில் சொல்லி உள்ளோம். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஆணையம் செய்யவில்லை என்று கூறி உள்ளோம். இது எங்களது குற்றச்சாட்டில் ஒன்றாகும்.

    இப்போது நமக்கு வேண்டியது உயிர் தண்ணீராக காவிரியில் தினமும் நாள் ஒன்றுக்கு 24 ஆயிரம் கன அடி திறக்க கேட்கிறோம். அவர்கள் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது. 49 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். பயிரை காப்பாற்ற வேண்டும். குடிநீரை பற்றி அப்புறம் பேசலாம்.

    நீர் பற்றாக்குறை காலத்தில் இருக்கிற நீரை எப்படி பங்கீட்டு கொள்வது என்பதை முடிவு செய்யும் பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளது. அதில் பலமுறை முறையிட்டு விட்டோம். ஆனால் அவர்கள் இன்னும் அந்த வேலையை செய்யவில்லை. அதையும் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×