search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மினி மாநாடு: இன்று மாலை ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு
    X

    ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மினி மாநாடு: இன்று மாலை ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு

    • ஓ.பி.எஸ். புரட்சி பயணத்தை காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் தொடங்குவதாக அறிவித்து பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.
    • அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கட்சியின் தொடக்க விழாவை விமரிசையாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யவும் திட்டமிடப்படுகிறது.

    சென்னை:

    எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அனைத்து மாவட்டத்திற்கும் மாவட்ட செயலாளர்களை நியமித்து போட்டி மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே கூட்டணி முறிந்த நிலையில் தங்களுடன் பா.ஜ.க. தொடர்பில் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டசபையிலும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எழும்பூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. அ.தி.மு.க. தொடங்கி 52 ஆண்டுகள் ஆகிறது. கட்சியின் தொடக்க விழாவை வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில் 17-ந்தேதி மினி மாநாடு நடத்த முடிவு செய்யப்படுகிறது. அ.தி.மு.க. 52-வது தொடக்க நாளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்த ஆலோசிக்கப்படுகிறது.

    ஓ.பி.எஸ். புரட்சி பயணத்தை காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் தொடங்குவதாக அறிவித்து பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் அ.தி.மு.க. தொடக்க விழா மினி மாநாட்டை சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்படுகிறது.

    அதற்கான பெரிய அளவிலான இடவசதி கொண்ட பகுதி பெருங்குடி அல்லது பல்லாவரத்தில் தேர்வு செய்யலாமா எனவும் ஆலோசிக்கப்படுகிறது.

    அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கட்சியின் தொடக்க விழாவை விமரிசையாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யவும் திட்டமிடப்படுகிறது.

    அனைத்து மாவட்டத்திற்கு மேலும் பிற அணி பொறுப்பாளர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்படுகிறது. இளைஞர் அணி, மகளிர், பாசறை, மருத்துவ, மாணவர் அணி என அனைத்து சார்பு அணிகளுக்கும் மாவட்டம் முதல் நகர, பேரூர் கிளை கழகம் வரை நிர்வாகிகளை நியமித்து டிசம்பர் மாதத்திற்குள் பட்டியல் தர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    பா.ஜ.க.வுடன் இணக்கமான உறவை மேம்படுத்துவதை குறித்தும் 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசவும் விவாதிக்கப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து மீதமுள்ள கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க. பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி முக்கிய அங்கமாக இருக்கும் என்பதால் அதற்கான அடிப்படையிலான அணுகுமுறைகளை கையாளவும் மாவட்டச் செயலாளர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்படலாம் என தெரிகிறது.

    Next Story
    ×