search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
    X

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

    • கடந்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வேகமாக நகர்ந்து வருகிறது.
    • சென்னை உள்பட வட மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து அது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது.

    நேற்று சென்னையில் இருந்து தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவில் அது நிலைக்கொண்டிருந்தது. நேற்றிரவு தொடர்ந்து கடலோரத்தை நோக்கி மேற்கு வடமேற்கு திசை நோக்கி வந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு முந்தைய நிலையாகும். இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு மாவட்டங்கள் அனைத்திலும் முழுமையாக மேகம் திரண்டு இருப்பதை சாட்டிலைட் படங்கள் மூலம் காண முடிந்தது.

    இந்த புயல் சின்னம் தற்போது மணிக்கு சுமார் 20 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவை கடந்து தமிழக வட கடலோரத்தை நெருங்கி இருக்கிறது.

    இன்று மதியம் அந்த புயல் சின்னம் சென்னைக்கு மிக அருகே நெருங்கி வருகிறது. இது தொடர்பாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளது.

    இன்று பிற்பகல் இந்த புயல் சின்னம் மேலும் சென்னையை நோக்கி அருகில் நகர்ந்து வரும். அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிக்ஜம்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.


    வட மாவட்டங்கள் அருகே புயல் நாளை நெருங்குவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்தப் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 6-ந்தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும்.

    இன்று கடலூா், மயிலாடுதுறை, நாகை , திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இது தவிர, வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.

    நாளை புயலாக வலுப்பெற்ற பிறகு அதன் நகர்வு வேகமும் அதிகரிக்கும். முதலில் வந்த கணிப்பின்படி இந்த புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதி இடையே கரையைய கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

    ஆனால் அதன் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு அருகே நெருங்கி வந்த பிறகு அந்த புயல் வடக்கு திசை நோக்கி திரும்பும். இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு புயல் இடம் மாறும்.

    அந்த புயல் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்க கடலில் நகர்ந்து வரும் புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து சென்னை உள்பட வட மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

    புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையிலும் தரைக் காற்று வீசும்.

    மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் மணிக்கு 75 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×