என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக குறைந்தது
- அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 794 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- 100 அடிக்கு குறையாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் இருந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பியது. பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அதிகளவில் வந்ததால் மேட்டூர் அணையும் நிரம்பியது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது மீண்டும் நீர்வரத்து குறைந்து விட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115,93 அடியாக குறைந்தது.
அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 794 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டாவுக்கு 19 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் 100 அடிக்கு குறையாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் இருந்து வருகிறது.






