என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 4,719 கன அடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
- அணைக்கு வினாடிக்கு 139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதே நேரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் தண்ணீர் வரத்து குறைந்தது.
மேட்டூர் அணை கட்டிய 90 ஆண்டு கால வரலாற்றில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் இந்த அளவு குறைந்தது இல்லை.
இந்த நிலையில் கர்நாடக அரசும் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக இந்த ஆண்டில் 2-வது முறையாக கிருஷ்ண ராஜசாகர் அணை 100 அடியை எட்டியது. அதே போல் கபினி அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.
ஆனாலும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை கொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் மீன்வளம் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நாளை முதல் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 3,719 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது.
இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 76.65 அடியாக உள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4,719 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






