search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை நீர்மட்டம் 46.81 அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 46.81 அடியாக குறைந்தது

    • நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
    • தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 46.81 அடியாக குறைந்தது. அணையில் நீர் இருப்பு 15.86 டி.எம்.சி. உள்ளது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். ஆனால் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரம் அடையவில்லை.

    இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில் வழக்கமாக தமிழகத்திற்கு திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்து விடவில்லை.

    இந்த நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், இந்த தண்ணீர் வந்து சேருவதை பிலிகுண்டுவில் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட பிறகு தான் கர்நாடக அரசு கடந்த 29-ந்தேதி முதல் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுகிறது.

    இந்த தண்ணீர் வருகிற 12-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்படும். அதன் பிறகு தண்ணீர் திறப்பு விவசாயிகளின் போராட்டம், அணையில் நீர் இருப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நீர் திறப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 217 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 893 கன அடியாகவும், நீர்மட்டம் 98.20 அடியாக உள்ளது. அதுபோல் கபினி அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 7 கன அடியாகவும், நீர் இருப்பு 13.61 டி.எம்.சியாகவும் உள்ளது.

    தற்போது இந்த அணைகளில் இருந்து தண்ணீர் பெயரளவில் தமிழக காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் 8,060 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் (5-ந்தேதி) 6,428 கன அடியாக சரிந்தது.

    தொடர்ந்து நேற்று நீர்வரத்து மேலும் சரிந்து 3,535 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது.

    இன்று காலையில் மேலும் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 3,021 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 47.99 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 47.33 அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 46.81 அடியாக குறைந்தது. அணையில் நீர் இருப்பு 15.86 டி.எம்.சி. உள்ளது.

    Next Story
    ×