என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 938 கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணை நீர் தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாளம்பாளமாக வெடித்திருப்பதை படத்தில் காணலாம்.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 938 கன அடியாக அதிகரிப்பு

    • டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேட்டூர்:

    தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. தண்ணீரை திறக்கவில்லை.

    இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது.

    இதையடுத்து கடந்த 16-ந்தேதி (புதன்கிழமை) கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 11 ஆயிரத்து 602 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 25 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து நேற்று (17-ந்தேதி) கிருஷ்ணராஜ சாகர் அணையில் 15 ஆயிரத்து 184 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 825 கன அடி தண்ணீரும் என மொத்தம் 22 ஆயிரத்து 9 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதையடுத்து இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 13 ஆயிரத்து 145 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 18 ஆயிரத்து 145 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 552 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக உயர்ந்தது. பின்னர் நேற்று மாலை 9 ஆயிரத்து 394 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 938 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி உள்ளது.

    நேற்று காலை 53.15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 53.50 அடியாக உயர்ந்தது. அணையில் நீர் இருப்பு 20.08.டி.எம்.சி ஆக உள்ளது

    மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளதால் பண்ணவாடியில் மூழ்கியிருந்த நிலப்பரப்பு பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்ட பகுதியாக மாறி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

    தண்ணீர் வற்றிப்போன நீர் தேக்க பகுதிகள் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன. இந்த நிலப்பரப்புகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் புற்கள் அதிகளவில் முளைத்து பார்ப்பதற்கு பசுமையான மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை இந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

    Next Story
    ×