என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 98.98 அடியாக சரிவு
- அணைக்கு வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
- தற்போது அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 8-வது நாளாக நேற்றும், விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று 547 இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 454 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்துவருகிறது. நேற்று 99.64அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 98.98 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ந் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். கடந்த 2022-ம் ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து, 249 நாட்களில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 205 டி.எம்.சி. தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 8.40 டி.எம்.சி. தண்ணீரும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி முதல், டெல்டா பாசனத்திற்காக தினமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ந்தேதி 100 அடிக்கும் கீழ் சரிந்த நீர்மட்டம், ஓராண்டுக்கு பின்பு மீண்டும் 100 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது.






