search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஒரேநாளில் 4200 மாணவர்கள் விண்ணப்பம்- விண்ணப்பம் பூர்த்தி செய்ய உதவி மையங்கள் ஏற்பாடு
    X

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஒரேநாளில் 4200 மாணவர்கள் விண்ணப்பம்- விண்ணப்பம் பூர்த்தி செய்ய உதவி மையங்கள் ஏற்பாடு

    • கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள் நேற்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். அரசுப்பள்ளியில் படித்து தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்.

    நேற்று ஒரேநாளில் 4200 பேர் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 1500 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளனர். அரசு கல்லூரி ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 5050 உள்ளன. இதுதவிர 3 தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 450 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் 75-ல் இருந்து 125 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 10-ந்தேதி கடைசி நாளாகும். ஆனாலும் அதுவரையில் காத்திருக்காமல் உடனடியாக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் விவர குறிப்பேட்டை முறையாக படிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் நிதானமாக படித்து பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது பெரியவர்களை உடன் வைத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று அவசரத்தில் தவறாக பூர்த்தி செய்ய வேண்டாம்.

    மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரத்தில் சென்று அவர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதோடு பூர்த்தி செய்யவும் அங்குள்ளவர்கள் உதவி செய்வார்கள்.

    விளக்க குறிப்பேட்டில் தெளிவான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பின்பறி பிழை இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×