search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரசிகர்கள் காட்சிகளுக்கு விதிமுறைகளை வகுக்க கோரி வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
    X

    ரசிகர்கள் காட்சிகளுக்கு விதிமுறைகளை வகுக்க கோரி வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

    • பிரபல கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் சினிமா படங்களின் சிறப்பு காட்சிகளில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் இல்லை.
    • தியேட்டருக்குள் மற்ற பார்வையாளர்களை சினிமா பார்க்க விடாமல் ரகளையில் ஈடுபடுகின்றனர்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. பிரபலமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் புதிய சினிமா படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

    இவற்றில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் நடித்த சினிமா படங்கள் வெளிவரும்போது அவர்களின் ரசிகர்கள் அந்த நாளை திருவிழா போல கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் ஷோ, சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது.

    இந்த காட்சிகளின் போது தியேட்டர்கள் முன்பு 24 மணி நேரமும் ரசிகர்கள் பெரும் கூட்டமாக நின்று கொண்டு சாலையில் பட்டாசுகள் வெடிப்பது, பேனர், கட்அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

    இதனால் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதே போல தியேட்டருக்குள் மற்ற பார்வையாளர்களை சினிமா பார்க்க விடாமல் ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அங்குள்ள இருக்கைகள், திரைச்சீலை உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவதும் வழக்கமாக நடக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் இளம் சமுதாயம் எதிர்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் அவலம் ஏற்படும்.

    பல ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற ரசிகர்கள் என்ற போர்வையில் தங்களது உடல் நலத்தை கெடுத்து, பெற்றோருக்கு பல கஷ்டங்களை கொடுக்கின்றனர். பிரபல கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் சினிமா படங்களின் சிறப்பு காட்சிகளில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் இல்லை.

    ரசிகர் மன்றம் சார்பில் ஒரு டிக்கெட்டுக்கு 1000 ரூபாய்க்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சில ரசிகர்கள் பறவை காவடி, பூ மழை, கிரேன் வாகனத்தில் காவடி என ஆபத்தான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பலர் உயிரை இழக்கின்றனர்.


    சமீபத்தில் யூ-டியூபர் டி.டி.எப் வாசனின் செயலை கடுமையாக நீதிமன்றம் விமர்சித்துள்ளது. காரணம் அவரது நடவடிக்கை இளம் தலைமுறையினரை கெடுத்து, அவர்களின் உயிருக்கு ஆபத்து அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதாகவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

    இதேபோல்தான் பிரபல சினிமா கதாநாயகர்களின் இளம் ரசிகர்களின் நடவடிக்கையும் உள்ளது. இது அவர்களின் வாழ்க்கையை கெடுத்து விடும்.

    எனவே முன்னனி கதாநாயகர்கள் நடித்த சினிமா வெளியிடப்படும் போதும், டிரெய்லர் வெளியிடும் போது ரசிகர்கள் காட்சி, சிறப்பு காட்சிகளின் போது தியேட்டர்கள் முன்பாக ரசிகர்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை வகுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×