search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொல்லிமலை நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி
    X

    கொல்லிமலை நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி

    • சுற்றுலா பயணகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு தமிழகம்மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காட்சி முனையம், அறப்பரளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்த்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் இங்குள்ள மாசிலா அருவி பசுமை சுற்றுச் சூழல் திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறை மூலம் நடைபாதை, பொழுது போக்கு பூங்கா, உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்சமயம் சுற்றுலா பயணகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    விடுமுறை நாட்களில் கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ள மாசிலா அருவிக்கு சென்று குளிப்பது, செல்பி மற்றும் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் பாறைகளில் வழுக்கி தவறி விழுந்து அடிப்படுவது போன்ற சம்பவங்களும் நடப்பது உண்டு.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த சபாபதி மகன் குணால் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 6 பேருடன் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார்.

    அவர் தடைசெய்யப்பட்ட மாசிலா அருவியின் மேல் பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று குளித்துள்ளார். அப்போது குணால் குளித்துக் கொண்டே வீடியோ கால் மூலமாக தனது ஊரில் உள்ள நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்போது திடீரென கால் வழுக்கி அங்குள்ள 70 அடி பள்ளத்தில் விழுந்து குணால் பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கல்யாணம். இவரது மகன்கள் நவீன்காந்த் (23), நிதிஷ்காந்த் (21). இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றனர். நேற்று மதியம் இருவரும் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர்.

    அப்போது அங்கு நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் 500 படிக்கட்டுகளை கடந்து சென்றபோது, நிதிஷ்காந்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீன்காந்த், இதுகுறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடம் வந்து நிதிஷ்காந்தை மீட்டு சேம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×