என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடுமுடி அருகே நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி
    X

    கொடுமுடி அருகே நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி

    • விபத்தில் ஹரிகிருஷ்ணன், தனுஷ், ஹரி, முகமது ஆகிய 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த நல்லசொல்லிபாளையம் பகுதி சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (20), கொடுமுடி இலுப்பு தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரி (19), கொடுமுடி எஸ்.எம்.பி. நகரை சேர்ந்தவர் முகமது (22). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். நேற்று இரவு 11 மணியளவில் 4 பேரும் ஒரே காரில் கொடுமுடியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை தனுஷ் ஓட்டி சென்றார்.

    அப்போது கார் கோம்புபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்தது. நாய் மேல் மோதாமல் இருக்க தனுஷ் காரின் பிரேக்கை பிடித்துள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹரிகிருஷ்ணன், தனுஷ், ஹரி, முகமது ஆகிய 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் ஹரிகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விபத்து குறித்து மலையம்பாளையம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×