என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராய விவகாரம்- கள்ள மவுனம் சாதிக்கின்றனவா கூட்டணி கட்சிகள்?
- சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- வரும் 22 அன்று, தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் நேற்று மதியம் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது. இதற்கு அம்மாவட்ட கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார், உயிரிழந்தவர்கள் வயிற்றுப்போக்கு, வலிப்பு நோய் போன்ற இணைநோயால் உயிரிழந்தார்கள் என்று விளக்கம் அளித்தார். இதையடுத்துதற்போது வரை வெளியாகும் தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை கள்ளச்சாராயம் குடித்ததால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கண்டனங்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆளுங்கட்சி தொடர்பு இருப்பதால் தான் காவல்நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த வருடம் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாத சூழல் உள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் என்பது தங்கள் உறவுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு போதாது. மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்," என வலியுறுத்தி உள்ளார்.
கள்ளச்சாராயம் சம்பவம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் 22 அன்று, தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இப்படி எதிர்க்கட்சிகள் அனைவரும் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டிகளை கூறிவரும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்காதது, மனிதத்தை கடந்து அரசியல் கூட்டணி வலுப்பெற்று இருப்பதை காட்டுகிறது.
கள்ளக்குறிச்சியில் நடந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நேற்று விரிவாக அறிக்கை கொடுத்து இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவோடு நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு விரைகிறோம். இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். காவல்துறை விழிப்போடு இருக்க வேண்டும். சம்பவத்திற்கு காரணமானவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் ஆட்சிகளிலும் கள்ளச்சாராய பலிகள் நடந்துள்ளன. முதலமைச்சர் ராஜினிமா செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது வெறும் அரசியல். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலிக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கும், பாதிக்கப்படும் மக்களுக்கும் ஆளும் கட்சியில் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களுக்கான உரிமையில் குரல் கொடுக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.






