search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை
    X

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

    • கடந்த தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளித்தது.
    • தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

    11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

    கடந்த 11 ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.10000 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தமிழகத்தில் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளித்தது. அதனை பின்பற்றி தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அவர்களின் கோரிக்கை மிக நியாயமானது. அத்தோடு மட்டுமல்லாமல் மே மாதங்களில் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே குறைந்த ஊதியத்தால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கும் அவர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படாததால் மிகுந்த சிரமத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவார்கள் என்கிற நம்பிக்கை வீண் போகாத வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    வீட்டு வாடகை, மின்சார கட்டணம், மருத்துவ செலவு உணவு பொருட்கள் போன்றவற்றிற்கான பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய முடியாத அவல நிலையில் இருக்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும். அவர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×