என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. பெண் பிரமுகர் வீடு உள்பட 4 இடங்களில் அதிரடி: கோவையில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
    X

    தி.மு.க. பெண் பிரமுகர் வீடு உள்பட 4 இடங்களில் அதிரடி: கோவையில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

    • சோதனையின் போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
    • கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக இருப்பவர் மீனா ஜெயக்குமார்.

    இவர் தனது குடும்பத்தினருடன் கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இவரது வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக 2 கார்களில் வந்தனர்.

    மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    இதேபோல் சிங்காநல்லூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை முடிவுக்கு பிறகு எஸ்.எம்.சாமியை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இதுதவிர சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடையில் உள்ள காசாகிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் மற்றும் தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டில் சோதனை நிறைவடைந்து விட்டது.

    மற்ற இடங்களில் 3 நாட்களை கடந்து சோதனை சென்று கொண்டிருக்கிறது.

    இன்று 4-வது நாளாக மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின் போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நடந்தது.

    சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்தது.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    சோதனை நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×