search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- பஸ், ரெயில் நிலையங்களில் போலீஸ் குவிப்பு
    X

    நாளை மறுநாள் சுதந்திர தின விழா: தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு- பஸ், ரெயில் நிலையங்களில் போலீஸ் குவிப்பு

    • சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
    • தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்றும் அனைத்து மாநிலங்களிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மீனவ கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. கடலோர பகுதிகளிலோ அல்லது கடல் பகுதியிலோ மர்மமான முறையில் ஏதாவது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மீனவ கிராமங்களையொட்டி உள்ள போலீசாரும் மரைன் போலீசாரும் கூட்டாக மீனவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.

    சுதந்திர தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையொட்டி அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் கடந்த வாரம் முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விடுதிகளில் தங்குபவர்கள் பற்றிய முழு விவரங்களையும் லாட்ஜ் உரிமையாளர்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து முக்கிய கோவில்கள் அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் நாச வேலைக்கு யாரேனும் திட்டமிட்டு உள்ளார்களா? என்பதை கண்டறிந்து அதனை முறியடிக்கும் வகையில் ரெயில்வே போலீசார் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைக்கிறார். இதையொட்டி, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின பாதுகாப்பு தொடர்பான இந்த நடவடிக்கைகளை வருகிற 16-ந் தேதி வரை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×