என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    10, 11-ந்தேதிகளில் மிக கனமழை பெய்யும்: 4 மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
    X

    10, 11-ந்தேதிகளில் மிக கனமழை பெய்யும்: 4 மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

    • தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் இன்று கூறியதாவது:-

    இலங்கை கடற்கரையையொட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 9-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    இதற்கிடையில் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    9-ந்தேதி தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 10-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    11-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×