search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-2 வில் தானே தோற்றீர்கள், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டாமா?- போனில் அழைத்து தவறான முடிவுகளை தடுக்கும் கவுன்சிலர்கள்
    X

    பிளஸ்-2 வில் தானே தோற்றீர்கள், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டாமா?- போனில் அழைத்து தவறான முடிவுகளை தடுக்கும் கவுன்சிலர்கள்

    • ஹலோ... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கிறது? வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையில் இருக்கிறீர்களா? என்கிறார்கள்.
    • ஆலோசனை வழங்கும் போது கவுன்சிலர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் சமயோசிதமாக பேசி அவர்களின் மனதை மாற்றுகிறார்கள்.

    சென்னை:

    பிளஸ்-2 விற்கு பிறகு மருத்துவமா? என்ஜினீயரிங்கா? என்ன படிக்கலாம்? என்ற பலவிதமான கனவுகளுடன் இருந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சறுக்கினால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

    போச்சு... எல்லாம் போச்சு... என்று விரக்தியடைந்து உயிரையே மாய்த்துக் கொள்ளும் மனநிலைக்கு சென்று விடுகிறார்கள்.

    அவர்களின் மனநிலையை மாற்றி இயல்பு நிலைக்கு திருப்பி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட சிறப்பு ஆலோசனை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைத்து உள்ளது. இதற்காக 104 என்ற தனி போன் எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மையம் டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்படுகிறது.

    40 மனநல ஆலோசகர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். நேற்று தேர்வு முடிவு வெளியானதில் 47 ஆயிரம் பேர் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளார்கள்.

    இவர்களின் போன் எண்களை இந்த ஆலோசனை மையத்தில் சேகரித்து வைத்து உள்ளார்கள். தேர்வு முடிவு வெளியானதும் மிக குறைந்த மதிப்பெண்களில் வெற்றியை நழுவவிட்டவர்களின் போன் எண்களை தனியாக பிரித்து எடுத்தார்கள்.

    உடனடியாக அவர்கள் ஒவ்வொருவரையும் போனில் தொடர்பு கொண்டார்கள். மறுமுனையில் போனை எடுத்ததும் அவர்கள் குரலை வைத்தே ஆலோசகர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

    ஹலோ... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கிறது? வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையில் இருக்கிறீர்களா? என்கிறார்கள்.

    அதை கேட்டதும் மறுமுனையில் விம்மி அழுவதை புரிந்து கொள்கிறார்கள். என்ன தம்பி... எவ்வளவு தைரியமானவர் நீங்கள்... இப்படி அழலாமா... என்று உரையாடல் தொடங்கி மன அழுத்தத்தை குறைத்து அவர்களது எண்ணத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    இன்று வரை 2 ஆயிரம் பேரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். இந்த உரையாடலின் போதே 'ஹை ரிஸ்க்கில்' இருப்பவர்கள் தனியாக அடையாளம் கண்டு விடுகிறார்கள்.

    அவர்களை மட்டும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். இதுவரை 4 பேர் ஹை ரிஸ்க்கில் இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள். அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

    ஆலோசனை வழங்கும் போது கவுன்சிலர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் சமயோசிதமாக பேசி அவர்களின் மனதை மாற்றுகிறார்கள்.

    பிளஸ்-2 வில் தோற்றதால் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக நினைக்கலாமா? இன்னும் துணைத் தேர்வு இருக்கிறது. அப்போது மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெற முடியும்.

    மதிப்பெண் குறைந்துவிட்டதே நான் விருப்பப்பட்ட பாடத்தை படிக்க முடியாதே என்று கவலைப்படுகிறீர்களா? அதற்கு இணையான எத்தனையோ பாடங்கள் இருக்கிறது. உங்களால் இன்னும் எவ்வளவோ சாதிக்க முடியும் என்கிறார்கள். மேலும் அவர்களுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.

    இதுதவிர நட்புடன் உங்களோடு மனநல சேவை என்ற இலவச தொலைபேசி (14416) எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு முற்றிலும் தற்கொலையை தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

    ஆனால் இந்த எண்ணை மன அழுத்தத்தில் இருப்பவர் தொடர்பு கொண்டால் சில நிமிட காத்திருப்புக்கு பிறகு இந்திக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆங்கிலத்துக்கு எண் 2-ஐ அழுத்தவும், தமிழுக்கு எண் 3-ஐ அழுத்தவும் என்று மொழியை தேர்வு செய்ய சொல்கிறது.

    அதன் பிறகு தமிழகத்தை சேர்ந்தவர்களா? புதுச்சேரியை சேர்ந்தவர்களா? என்பதை தேர்வு செய்கிறார்கள்.

    இத்தனை வேலையும் முடிந்த பிறகு அனைத்து இணைப்புகளும் பிசியாக உள்ளன. தயவு செய்து லைனில் காத்திருங்கள் என்று சில நிமிட ரெக்கார்டு பதிவை கேட்டு கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகுதான் இணைப்பு கிடைக்கும்.

    தற்கொலை முடிவு என்பது ஓரிரு நொடிகளில் எடுப்பது. அந்த நேரத்தில் அவர்களின் எண்ணத்தை மாற்றினால்தான் பலன் கிடைக்கும்.

    ஆனால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவர்கள் போன் பண்ணி கூடுதல் 'டென்ஷனை' வரவழைக்க விரும்பமாட்டார்கள். எனவே 14416 எண்ணின் செயல்பாட்டில் மாற்றம் தேவை.

    'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகினில்' என்பது உங்களுக்காக பாடப்பட்டது. பிளஸ்-2 என்பது ஒரு முயற்சி. அந்த முதல் முயற்சி உங்களுக்கு கைகொடுக்காமல் போயிருக்கலாம். போனால் போகட்டும்.

    இன்னும் முயற்சிக்கலாம். வேறு எவ்வளவோ படிக்கலாம். முன்னேறலாம். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. இந்த தோல்வி வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிக்கான திருப்புமுனை யாக கூட இருக்கலாம். கவலையை விடுங்கள். அடுத்த கட்டத்தை நோக்கி பயணியுங்கள்.

    Next Story
    ×