என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பினர்: செங்கல்பட்டு-தாம்பரம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல்
- செங்கல்பட்டை கடந்து தாம்பரத்தை நோக்கி வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
- வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதி அடைந்தனர்.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் நேற்று ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பினர்.
இதேபோல் 2 நாள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் நேற்று சென்னை திரும்பினர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து கார்கள், பஸ்கள் என வாகனங்களில் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்தனர்.
இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து வந்தன. இன்று அதிகாலை வாகனங்கள்அனைத்தும் ஒரே நேரத்தில் சென்னை எல்லைக்குள் நுழைந்ததால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியை கடக்க வாகனங்களுக்கு சுமார் 15 நிமிடம் வரை ஆனது. செங்கல்பட்டை கடந்து தாம்பரத்தை நோக்கி வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான 35 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வாகனங்களுக்கு இரண்டு மணிநேரம் ஆனது. ஒருசிலர் நெல்லிக்குப்பம் வழியாக செல்ல முயற்சித்தபோதிலும் கூடுவாஞ்சேரி அருகே நெரிசலில் சிக்கிக்கொண்டனர். இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு- தாம்பரம் சாலையில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வாகன போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது. காலை 7 மணிக்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது. தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்கு வரத்து போலீசார் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.






