search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோத்தகிரி-குன்னூரில் மழை: நிலச்சரிவால் சாலைகள் சேதம்-50 வீடுகள் இடிந்தன
    X

    கோத்தகிரி-குன்னூரில் மழை: நிலச்சரிவால் சாலைகள் சேதம்-50 வீடுகள் இடிந்தன

    • வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தன.
    • குன்னூர் நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு, மரங்கள் முறிந்து விழுவது என பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இரவு, பகலும் பாராமல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம்-குன்னூர், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இந்த சாலைகளில் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீரமைப்பு பணி முடிந்து நேற்று மதியத்திற்கு பிறகே போக்குவரத்து தொடங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்குள்ளானார்கள்

    குன்னூர் முத்தாலம்மன்பேட்டை, வண்டிச்சோலை, எம்.ஜி.ஆர் நகர், மற்றும் உமரி காட்டேஜ் உள்பட பல இடங்களில் குடியிருப்புகள் சேதமடைந்தது. அந்த பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்கள் மற்றும் வீடுகளுக்குள்ளும் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது.


    இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தன. தண்ணீர் புகுந்ததால் மக்கள் விடிய, விடிய தூங்க முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

    குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள கழிவு நீர் மற்றும் மழை நீரினை அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர் அம்மன் நகர் பகுதியில் அதிகாலையில் ஒரு வீட்டின் மீது பாறை விழுந்து அந்த வீடு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர். குன்னூர் பகுதியில் பெய்த தொடர் மழைக்கு நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 50 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அபாயகரமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் மலைப்பாதை மற்றும் மலை சரிவுகளில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் மண் சரிவின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அபாயகரமான இடத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடைகோடி கிராமமான கீழ்கோத்தகிரியை அடுத்து கரிக்கையூர் உள்ளது. இங்கு பெய்த கனமழைக்கு, கரிக்கையூர் செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 25 மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். சாலை துண்டிக்கப்பட்டதால் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு 15 கிலோ மீட்டர் சுற்றியே நகர பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அருணா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8.7 செ.மீ மழை பதிவானது. இன்று மழை சற்று குறைந்துள்ளதை அடுத்து குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    Next Story
    ×