search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்பு
    X

    சென்னையில் இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்பு

    • தென்சென்னை பகுதிகளில் 50 மி.மீ முதல் 70 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
    • கடந்த 4 வருடங்களாக ஜனவரி மாதம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள் பகுதிகளில் தீவிரம் அடைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ. மழை பெய்து உள்ளது. திருவாரூரில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.

    பலத்த மழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் இன்று 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், கனமழை மட்டுமே பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    தமிழகத்தில் மழை மேகங்கள் டெல்டா பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை நேற்று மையம் கொண்டிருந்தது. அந்த மழை மேகங்கள் கொஞ்சம் மேலே நோக்கி நகர்ந்து இன்று புதுச்சேரி, விழுப்புரம், மரக்காணம், மாமல்லபுரம் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மிக கனமழை பெய்து உள்ளது. சீர்காழி பகுதியில் 24 செ.மீ, திருவாரூரில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் அதிக மழை கொட்டி தீர்த்து விட்டது. தென்சென்னை பகுதிகளில் 50 மி.மீ முதல் 70 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இன்று காலையில் மழை மேகங்கள் தென்சென்னை பகுதிகளுக்கு வந்தது. இதனால் இன்று காலையில் தென்சென்னை பகுதிகளில் கனமழை பெய்தது.

    சென்னையில் இன்று 20 செ.மீ முதல் 25 செ.மீ. அளவுக்கு மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் பெய்து விட்டதால் சென்னையில் கனமழை மட்டுமே பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சமாளிக்கக்கூடிய வகையில் மழை விட்டு விட்டு பெய்யும்.

    காற்றழுத்தம், புயல் உருவாகும் போது மழை எங்கெங்கு பெய்யும், எவ்வளவு பெய்யும் என்பதை கணித்து சொல்ல முடியும். ஆனால் இது போன்ற காலங்களில் பெய்யும் மழை சற்று வித்தியாசமாக இருக்கும். எனவே எவ்வளவு மழை பெய்யும் என்பதை கணிப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது. அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜனவரி மாதம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பரவலாக 2 செ.மீ. மழை தான் வழக்கமாக பெய்யும். சென்னையில் 2 அல்லது 3 செ.மீ. வரை மழை பெய்யும். ஆனால் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ. முதல் 8 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது.

    கடந்த 4 வருடங்களாக ஜனவரி மாதம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை அப்படி கிடையாது. 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஜனவரி மாதம் மழை பெய்யும். இப்போது 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் மழை பெய்து வருகிறது. அதாவது கால நிலையில் புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி ஜனவரியில் பொங்கல் பண்டிகை வரை நீடித்து வருகிறது. ஜனவரி மாதம் அதிக அளவில் மழை பெய்வது வரலாறு காணாத விஷயம் தான். சீர்காழி, திருவாரூரில் ஜனவரி மாதம் 10 மடங்கு அதிக மழை பெய்துள்ளது.

    கீழடுக்கு சுழற்சி அரபிக்கடலை நோக்கி நகர்வதால் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழை பெய்யும். தமிழகத்தில் மழையின் தாக்கம் வருகிற 11-ந்தேதி வரை இருக்க வாய்ப்புள்ளது. வட தமிழக பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்து விடும். அதன் பிறகு உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் நேற்று முதல் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பெய்துள்ளது.

    தமிழகத்தில் இன்று காலையில் 29 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடலில் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் தொடர்ந்து மிதமான மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×