என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 3-வது நாளாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை
    X

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 3-வது நாளாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை

    • ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
    • மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம்:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், காடையாம்பட்டி, தம்மம்பட்டி கரியகோவில், தலைவாசல் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த பகுதிகளில் இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 2 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஆத்தூர் பெரியமாரியம்மன் கோவிலில் தற்போது ஆடிப்பண்டிகை நடந்து வருகிறது. நேற்று செண்டைமேளங்கள் முழங்க சத்தாபரண நிகழ்ச்சி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 2 மணி வரை நீடித்ததால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பக்தர்கள் கவலை அடைந்தனர்.

    ஏற்காட்டில் 3-வது நாளாக நேற்றிரவு சாரல் மழை பெய்தது. மேலும் பனி மூட்டமும் நிலவுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் முற்றிலும் குறைந்து அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டிமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 9 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சாரல் மழையாக விடிய விடிய நீடித்தது. இதனால் சேலம் மாநகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி 60, வீரகனூர் 58, காடையாம்பட்டி56, தம்மம்பட்டி 55, கரியகோவில் 38, தலைவாசல் 37, பெத்தநாயக்கன் பாளையம் 30, சங்ககிரி 23.2, சேலம் 22, ஆனைமடுவு 15, ஏற்காடு 13,2, ஓமலூர் 6, மேட்டூர் 5.8, எடப்பாடி 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 502.20 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நாமக்கல் நகரில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டிய நிலையில் மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து இரவில் கலெக்டர் அலுவகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், கபிலர்மலை, பாலப்பட்டி, மோகனூர், எஸ்.வாழவந்தி, ஜேடர்பாளையம், சோழசிராமணி, மணியனூர், கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இரவு முழுவதும் மழை தொடர்ந்து பெய்தது.

    இதேபோல் சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.

    பள்ளிபாளையத்தில் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் சாரல்மழை பெய்தது.

    இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரலுடன் தொடங்கி மிதமான மழை பெய்தது. தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு (மில்லி மீட்டரில்): எருமபட்டி-8, குமாரபாளையம்-2.20, மங்களபுரம்-38.80, மோகனூர்-5, நாமக்கல்-7, பரமத்திவேலூர்-4, புதுச்சத்திரம்-12, ராசிபுரம்-32, சேந்தமங்கலம்-6, திருச்செங்கோடு-9, கலெக்டர் அலுவலகம்-31, கொல்லிமலை செம்மேடு-10 என மொத்தம் 165 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×