என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
- பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக செவ்வாழை, நேந்திரன், கதளி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.
- சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னமலை பகுதியில் சுமார் 2 மி.மீட்டர் மழை பெய்தது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் காலை மற்றும் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இரவில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இதே போல் கோபிசெட்டிபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கோபி செட்டிபாளையம்அருகே உள்ள பொலவகாளி பாளையம், நாதிபாளையம், கல்லுக்குழி, தோட்டக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கதளி, செவ்வாழை, நேந்திரன், மொந்தன் உள்ளிட்ட ரகங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக செவ்வாழை, நேந்திரன், கதளி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.
வாழை சாகுபடியில் ஒருவாழை நடவு செய்ய சுமார் ரூ.15 முதல் ரூ.150 வரை செலவு செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றினால் முறிந்தும் சாய்ந்தும் சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண்துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பெரும்பாலும் இயற்கை சீற்றத்தின் போது காற்றினால் வாழை மரங்கள் சேதம் ஆவதாகவும் அவ்வாறு காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கும் காப்பீட்டு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலத்தில் சாய்ந்த வாழை மரங்களை அப்புறப்படுத்த கூடுதல் செலவாகும் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் நேற்று இரவு கோபிசெட்டிபாளையம், டி.என்.பாளையம், நம்பியூர், ஆப்பக்கூடல், அத்தாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அதன் பிறகு இரவு முழுவதும் மழை தூறி கொண்டே இருந்தது.
மேலும் குண்டேரி பள்ளம் வனப்பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அந்த பகுதியில் 1.2 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்தது.
சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னமலை பகுதியில் சுமார் 2 மி.மீட்டர் மழை பெய்தது.
இதே போல் இன்று காலையும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மேகமூட்டத்துடனேயே காணப்பட்டு வருகிறது.






