search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: கோபிசெட்டிபாளையத்தில் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பரபரப்பு

    • கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
    • கோபி அருகே உள்ள அரசூர், தட்டான் புதூர் தரைப்பாலம் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், கொடுமுடி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கனமழை தொடர்ந்து பெய்தது.

    கோபிசெட்டிபாளையம், கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சமைதாங்கி, குளத்துகடை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் 80 மில்லி மீட்டர் மழைப்பதிவானது.

    கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் 3 அடி உயரத்துக்கு புகுந்ததால் வீடுகளில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு சென்றனர். இரவு நேரத்தில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வீட்டில் உள்ள பொருட்களை மேல் பகுதியில் பத்திரமாக வைத்தனர். இன்று காலை வரை மழை நீர் சூழ்ந்திருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்து இருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. மழை பெய்யும் போதெல்லாம் இந்த பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுவது தொடர் கதையாகி வருவது.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை கொம்பு புதூரில் ஒன்று திரண்டு அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் தாசில்தார் உத்தர சாமி மற்றும் வருவாய் துறையினர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.

    அப்போது பல ஆண்டுகாலமாக மழை நீர் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகவே பள்ளத்தை சென்றடைந்து வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் தடுப்பு சுவர் அமைத்ததால் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் 50 வீடுகளில் புகுந்தது தெரியவந்தது.

    கோபி அருகே உள்ள அரசூர், தட்டான் புதூர் தரைப்பாலம் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்போது மக்கள் 6 கிலோமீட்டர் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.

    பலத்த மழை எதிரொலியாக கொடிவேரி அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை இருபுறங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கொடிவேரி தடுப்பணை பகுதியில் 1,600 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×