என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தென்மேற்கு பருவமழை தீவிரம்- கோவை, நீலகிரியில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை
    X

    வால்பாறையில் மண்சரிவு காரணமாக தடுப்புச்சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் வீட்டை படத்தில் காணலாம்.

    தென்மேற்கு பருவமழை தீவிரம்- கோவை, நீலகிரியில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை

    • வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • மழையால் வால்பாறை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே மிதமானது முதல் கனமழை பெய்தது.

    பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, பிதர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு, தாளூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக பொன்னானி, சோலாடி ஆறுகள் மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கூடலூர் பகுதியில் பெய்த மழைக்கு தெப்பக்காடை அடுத்த மாயாற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் லைட்பாடி, ஆனைப்பாடியை சேர்ந்த மக்கள் ஒரு கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மழையுடன் சூறாவளி காற்றும் வீசி வருவதால், பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. தீயணைப்பு படையினர் உடனடியாக மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் குடைபிடித்த படி செல்கின்றனர். தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்போர், பணிக்கு செல்வோர் பிளாஸ்டிக் கவர் அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் வால்பாறை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    மழை காரணமாக சிறுவர் பூங்கா பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து 2 வீடுகள் சேதமானது. இதேபோல் துளசிங் நகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன.

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.

    தொடர் மழையால் வாழைத்தோட்டம், ஆறு, ஸ்டேன்மோர் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    வால்பாறை பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் அக்காமலை தடுப்பு அணை நிரம்பி வழிகிறது. மேலும் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.

    கடந்த 2 தினங்களாக வால்பாறையில் சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மாணவ, மாணவிகள் வந்து செல்லும் சிரமத்தை கருத்தில் கொண்டு கோவை கலெக்டர் உத்தரவின் பேரில் இன்று மற்றும் நாளை வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுப்பட்டுள்ளது. இந்த தகவலை வால்பாறை தாசில்தார் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×