search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள்- அட்சய திருதியைக்கு நகை வாங்க அலைமோதிய கூட்டம்
    X

    காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள்- அட்சய திருதியைக்கு நகை வாங்க அலைமோதிய கூட்டம்

    • சென்னையில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.
    • வாடிக்யைாளர்களும் காலையிலேயே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்க தொடங்கினார்கள்.

    சென்னை:

    அட்சய திருதியை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம்தான். அட்சய திருதியை என்பது மங்களகரமான தொடக்கத்திற்கு உகந்த நாள்.

    ஆனால் அதையும் தாண்டி தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.

    ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக சிலர் தங்க நாணயங்களை வாங்குகிறார்கள். நகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்குகிறார்கள்.

    இந்த ஆண்டில் திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. சூரிய உதய நேரத்தில் உள்ள திதியே அந்த நாளின் திதியாக கருதப்படும். இதன் அடிப்படையில் பார்த்தால் நாளை (23-ந்தேதி)தான் அட்சய திருதியை நாளாக கருதப்படுகிறது.

    ஆனால் நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை மட்டுமே திருதியை திதி உள்ளது. அதே நேரத்தில் இன்று காலை 7.49 மணிக்கே திருதியை திதி தொடங்கி விடுவதால் இன்றும் அடசய திருதியை நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த ஆண்டு இன்றும், நாளையும் என 2 நாட்கள் காலையில் திருதியை நாளாக கணக்கிடப்படுகிறது.

    இன்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்பதால் இன்று காலையிலேயே ஏராளமானோர் நகைக் கடைகளில் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கினார்கள்.

    ஆனால் அந்த நேரத்தில்தான் தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. நாள் முழுவதும் தங்கம் வாங்கலாம்.

    தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பு, மஞ்சள், மல்லிகைப்பூ மற்றும் மங்கள பொருட்களை வாங்கி வீட்டில் உள்ள சாமி படத்தின் முன்பு வைத்து பூஜை செய்து வழிபடலாம். தங்கமோ, மங்கள பொருளோ எதுவானாலும் சாமி படத்துக்கு முன்பு வைத்து வழிபட்ட பிறகு அன்றைய நாள் முழுவதும் அந்த பொருளை அங்கேயே வைத்து விட வேண்டும் மறுநாள் அந்த பொருட்களை எடுத்து நாம் பயன்படுத்தலாம்.

    சென்னையில் அட்சய திருதியை விற்பனை இன்று காலையிலேயே தொடங்கியது. இதையடுத்து சென்னையில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. வாடிக்யைாளர்களும் காலையிலேயே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்க தொடங்கினார்கள். இதனால் சென்னையில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் இன்று காலையிலேயே வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. தங்க நாணயம் வாங்க வந்தவர்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும் நகை வாங்க வந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு பிடித்த டிசைன்களில் நகைகளை வாங்கினார்கள்.

    இதுகுறித்து சென்னையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு அட்சய திருதியை இன்றும், நாளையும் என 2 நாட்கள் வருவதால் இன்று காலை 6 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டு நகை விற்பனை தொடங்கியது. காலை முதலே கூட்டம் அமோகமாக உள்ளது.

    வாடிக்கையாளர்களை கவருவதற்காக நகைக்கடைகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி சில நகைக்கடைகளில் தங்க நகைகளுக்கு பவுனுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    பெரும்பாலான நகைக்கடைகள் ஒரு மாதத்துக்கு முன்பே அட்சய திருதியை விற்பனைக்கான நகை முன்பதிவை தொடங்கின. அப்படி ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இன்று கடைகளுக்கு வந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.

    மேலும் கடைசி நேர நெருக்கடியை தவிர்ப்பதற்காக பலர் ஏற்கனவே சென்று நகைகளை தேர்வு செய்து வைத்திருந்தனர். அவர்களும் இன்று நகைக்கடைக்கு சென்று தாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை பணம் கொடுத்து வாங்கிச் சென்றனர்.

    ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு அன்றைய விலையிலேயே தங்க நகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேரம் செல்லச் செல்ல கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது.

    இன்று இரவு முழுவதும் அட்சய திருதியை உள்ளதால் இன்று இரவு வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கும் வரை கடைகள் திறந்திருக்கும். விற்பனை நேரமும் அதிகரிக்கப்படும். மேலும் நாளை (23-ந்தேதி) காலை 6 மணிக்கு மீண்டும் நகைக்கடகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெறும்.

    நாளையும் இரவில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை பொறுத்து விற்பனை நேரம் நீட்டிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×