search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்து சமய அறநிலையத்துறை கோவில், மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    இந்து சமய அறநிலையத்துறை கோவில், மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.
    • வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஆதீனங்களில் மிகவும் பிரபலமான பிரசித்தி பெற்ற ஆதீன மடமாக மதுரை ஆதீனமடம் இருந்து வருகிறது. மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு இடத்தை பகவர்லால் என்பவர் தரை வாடகைக்கு பயன்படுத்தும் விதமாக 10 வருட ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. இதற்கு மாத வாடகையாக ரூ.2 ஆயிரத்து 500 என்றும், அதில் கட்டிடங்கள் கட்டினால் 10 வருட பயன்பாட்டிற்கு பின் அது ஆதீனத்திற்கு சொந்தமானது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

    ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி 2013-ம் ஆண்டு மதுரை ஆதீனம் மற்றும் மாநகராட்சி உரிய அனுமதி இல்லாமல் பகவர்லால் பெரிய கட்டிடம் கட்டியது மட்டுமில்லாமல் வாடகையும் செலுத்துவதில்லை.

    எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு எதிராக தமிழ்நாடு புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் பகவர்லால் மனு தாக்கல் செய்து உள்ளார். இது குறித்து ஆதீன மடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் மற்றும் மடங்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டம் (2017) பொருந்தாது. எனவே வருவாய் கோட்டாட்சியரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, ஆதீன மடத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 78-ன்படி கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான இடத்தில் உரிய வாடகை செலுத்தாதவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு மனு அளித்தோம். அதை விசாரணை செய்த இணை இயக்குனர் ஆக்கிரமிப்பாளரை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பகவர்லால் ஆணையரிடம் முறையீடு செய்தார். அது நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸ் சட்ட விரோதமானது. கோவில் மற்றும் மடங்களுக்கு இது பொருந்தாது எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை வசூல் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ள மனுவை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும். மேலும் வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம். அதேபோல தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறை கோவில் மற்றும் மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×