search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு விரைவு பஸ்களில் பாதிக்கட்டண சலுகை மே 1-ந்தேதி தொடக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரசு விரைவு பஸ்களில் பாதிக்கட்டண சலுகை மே 1-ந்தேதி தொடக்கம்

    • எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து முன்பதிவு செய்ய வேண்டும்.
    • பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று வருகிறது.

    பொதுவாக திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன. இடங்கள் நிரம்பாததால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இடங்கள் நிரம்புகிறது.

    நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் பயண சலுகை திட்டம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

    5 முறை பயணம் செய்வதற்கு சலுகை கிடையாது. அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும் பாதி கட்டணம் செலுத்தினால் போதும். இந்த சலுகையில் ஏசி பஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு பஸ்களுக்கும் பொருந்தும்.

    தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்பதால் இத்திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    50 சதவீத கட்டண சலுகை திட்டம் மே 1-ந் தேதி முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஒரு மாதத்தில் 6 முறை பயணத்தில் இருந்து சலுகை கட்டணம் கிடைக்கும்.

    ஒரே இடத்திற்கு இந்த பயணம் அமைய வேண்டும். உதாரணத்திற்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதாக இருந்தால் அங்கிருந்து சென்னை வர வேண்டும். பயணம் செய்யும் இடம் மாறக்கூடாது. ஒரே இடமாக இருக்க வேண்டும். இடம் மாறினால் பாதி கட்டண சலுகை கிடைக்காது.

    எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து முன்பதிவு செய்ய வேண்டும். பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது. இதற்கேற்றவாறு சாப்ட்வேர் பொருத்தப்படுகிறது. இந்த பணி ஒரு சில நாட்களில் நிறைவு பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×