search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: திரு.வி.க.நகரில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் கூடியுள்ளது
    X

    சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: திரு.வி.க.நகரில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் கூடியுள்ளது

    • கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சராசரியாக 0.10 மீட்டர் அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • இந்த ஆண்டில் ஜூலை-ஆகஸ்டு மாத புள்ளி விவரங்களின் அடிப்படையில் 0.62 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. பொதுவாக இக்காலக் கட்டத்தில் குறைவான மழைப்பொழிவு தான் இருக்கும். அக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அதனை தொடர்ந்து அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்திற்கு போதுமான அளவு மழையை கொடுப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் சென்னையில் பெய்த மழையின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நீர்மட்டம் எவ்வளவு உயர்ந்து உள்ளது என்ற விவரத்தை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் திரு.வி.க. நகர் மண்டலத்தில் தான் அதிகபட்சமாக 1.74 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    ஜூலை மாதத்தில் 7.59 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் இருந்த நிலையில் ஆகஸ்டில் 5.85 மீட்டராக குறைந்து உள்ளது. 2 மாதத்தையும் ஒப்பிட்டு சராசரியாக பார்க்கும் போது 1.74 மீட்டர் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து உள்ளது. அம்பத்தூரில் சராசரி நீர்மட்ட அளவு குறைந்துள்ளது. 6.70 மீட்டர் அளவு குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சராசரியாக 0.10 மீட்டர் அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டில் ஜூலை-ஆகஸ்டு மாத புள்ளி விவரங்களின் அடிப்படையில் 0.62 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி ஜூனில் இருந்து 544.7 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது 66 சதவீதம் கூடுதல் மழையாகும். திரு.வி.க.நகரை தொடர்ந்து கோடம்பாக்கம் 1.41 மீட்டர் அளவில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதையடுத்து தேனாம்பேட்டை மண்டலம் 1.14 மீட்டராக பதிவாகி உள்ளது. குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நீடித்து வருபவதே நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×