என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவெண்ணைய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்த கவர்னர் ஆர்.என்.ரவி
    X

    திருவெண்ணைய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்த கவர்னர் ஆர்.என்.ரவி

    • ஸ்ரீசிவலோகநாதர், செல்வாம்பிகையை தரிசித்த கவர்னர் ஆர்.என்.ரவி, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.
    • கவர்னர் ஆர்.என். ரவியிடம் தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜா கல்வெட்டுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    திருவெண்ணெய்நல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செல்வாம்பிகை உடனுறை ஸ்ரீ சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும்.

    இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் கி.பி.943-ல் வெள்ளாங்குமரன் மன்னரால் கருங்கல்லால் கட்டப்பட்டதாகும்.

    மேலும், வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற் றுப்பை (பொக்களம்) தந்தார். இதனால் இங்குள்ள கல்வெட்டில் பொக்களம் கொடுத்த நாயனார் என்றும் ஆற்றுத்தளி பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றார்.

    இந்த கோவிலின் தொன்மை விளக்கும் செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன. தொன்மைக்கும் பழமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற இக்கோவிலை காண்பதற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை 11.05 மணிக்கு கோவிலுக்கு வந்தார்.

    ஸ்ரீசிவலோகநாதர், செல்வாம்பிகையை தரிசித்த கவர்னர் ஆர்.என்.ரவி, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது கோவில் பிரகார கருங்கல் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அவரிடம் தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜா கல்வெட்டுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீசாரும் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×