search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தையே கல்லூரிகள் நடத்தலாம்- கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
    X

    பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தையே கல்லூரிகள் நடத்தலாம்- கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

    • பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.) கட்டுப்பட்டவையாகும்.
    • தமிழக அரசின் உயர் கல்வித்துறை கொண்டு வரும் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அமல்படுத்துவது தொடர்பாக தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஒரு சில கல்லூரிகளின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தன்னாட்சிக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் உயர் கல்வித்துறையானது கலை, அறிவியல் கல்லூரிகள் அனைத்து பொது பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலிந்து நிர்ப்பந்திப்பது தொடர்பாக பல்வேறு கல்வியாளர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர் தங்கள் கவலையை எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அதாவது, மாநில அரசின் பொது பாடத்திட்டம் கொண்டு வரப்படும்போது கல்விச் சுதந்திரம் பாதிக்கப்படும். இது கல்வியின் தரத்தைக் குறைக்கும். தேசிய அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், அகில இந்திய அளவில் ஆரோக்கியமான போட்டிச் சூழலுடன், கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இடம் பெறுவதையும் இது பாதிக்கும்.

    இதுபோன்ற நியாயமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் கல்வி என்பது மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டு மத்திய அரசின் பொதுப்பட்டியலில் உள்ளது. அதாவது, கல்லூரிகளின் பாடத்திட்டத்தைக் கண்காணிக்கும் அமைப்பாக பல்கலைக்கழக மானியக் குழுவே உள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டு யு.ஜி.சி.க்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

    பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.) கட்டுப்பட்டவையாகும். அதன் ஆளுமைக்கு உட்பட்டே பாடத் திட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. குறித்த கால இடைவெளியில் பாடத் திட்டங்கள் தொடர்பாக கல்வி கவுன்சில் மற்றும் நிர்வாக கவுன்சில் ஒப்புதல் பெற்று முடிவெடுக்கும் அதிகாரம் படைத்ததாக யு.ஜி.சி.யே உள்ளது.

    எனவே, தமிழக அரசின் பொது பாடத்திட்டம் என்பது எந்த யு.ஜி.சி.யின் வரம்புக்குட்பட்டது இல்லை. எனவே, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்திலேயே பாடங்களை நடத்தலாம்.

    தமிழக அரசின் உயர் கல்வித்துறை கொண்டு வரும் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×